மூன்றாவது முறையாக…

மூன்றாவது முறையாக போன வாரம் அதே lift ல் “Are you from Srilanka?” என ஒரு அம்மா கேட்டார். இதுவரை என்னிடம் Are you Srilankan? எனக் கேட்டவர்கள் 40-50 பேராவது இருப்பார்கள். அதுவும் 2008 ஜூன் 14 முதல் 2009 ஜூன் 14 வரை, பணி நிமித்தம் இந்திய எல்லை தாண்டி, இதுவரை போன ஊரிலெல்லாம்…சென்னையில்கூட இப்படிக் கேட்டிருக்கிறார்கள். பள்ளியில் படித்தபோது அது இலங்கைத் தமிழர்கள் சென்னையிலும் குடியேறிய காலம்… பங்களாதேஷில் Exit Permit வாங்கச் சென்ற போது, பணம் கட்டும் இடத்திற்கு வழி காட்டினார் விசா அலுவலர். அங்கே, “இந்தியர்கள் கட்ட வேண்டாமே! ….மீண்டும் அந்த அம்மாவிடம் .. Oh! I thought you are Srilankan”!

என்னை பார்ப்பவர்கள் எல்லாம் கேட்டதில் ஒரு கட்டத்தில் நான் Srilankan என்றே நம்பத் தொடங்கி, வேர்களைத் தேடி எப்போதாவது இலங்கை போக வேண்டும் என நினைத்தேன். 2008 நவம்பரில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. தற்போதிருக்கும் வேலையைத் தொடங்கியதே இலங்கையில்தான். வேலையின் முதல் நாள் என் பிறந்த நாள் நவம்பர் 3 அன்றே! இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளில் கொழும்பில் கால் பதித்தேன். Srilankan Airlines முதல் கொழும்பு விமான நிலையம் வரையிலும்… அதைத்தாண்டியும் தமிழ்நாட்டில் உள்ளதைவிட அதிகம் தமிழ் கண்டேன்; கேட்டேன். இறங்கிய நிமிடம் முதல் கொழும்பு திருவனந்தபுரம்-கன்னியாகுமரி தோற்றமே! அயல் நாடு உணர்வு கொஞ்சமும் இல்லை.

தங்கியிருந்தது வெள்ளவத்தை என்ற தமிழர் மிகுந்த பகுதியில். அருகேயிருந்த பம்பலப்பட்டி மாணிக்க விநாயகர் கோவிலுக்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த கார்த்திக் என்ற மூத்த பணியாளர் அழைத்துச் சென்றார். சூரசம்ஹாரத்தை சூரன் போர் என்கிறார்கள். அன்று அதற்கான சிறப்பு நிகழ்வுகள் முடிந்திருந்தன. அழகான கோவிலில் திரளாகத் தமிழ் மக்களைப் பார்த்து, நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்ட மருதமலை மாமணியே முருகையா பாடலைக் கேட்டபோது சிலிர்த்தது.

சேவ் த சில்ரன் National Education Meeting-ஐந்து நாட்கள் அங்கிருந்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த சிங்களர் சிலரும் நான் இலங்கையின் ஒரு பகுதியிலிருந்து வந்ததாக நினைத்தார்களாம்.

தமிழ் நண்பர்கள், “கதைக்கலாம் வாங்க! என்றார்கள்!” “எங்கள் ஆள் ஒருவர் இந்தப் பதவியில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை” என்றார் செந்தில் என்ற நண்பர். உங்களுக்கு விஷயம் இருக்கிறது! இன்னும் முன்னேறுவீர்கள் ஆனா இந்த சர்வதேச கும்பலில் சும்மாவே சிரிக்கணும் அதுதான் உங்களுக்கு ஒத்துவருமான்னுதான் தெரியலை என்றார்”. ரொம்ப தீர்க்கதரிசனம் செந்தில்! இன்றுவரை தடுமாறுகிறேன். போலி உற்சாகம் ஒத்தே வரவில்லை! எதிர்பாராத விதமாக என் Presentation ன் போது அங்கு முதன்மைப் பொறுப்பில் இருந்த அயல்நாட்டவர் ரொம்பவே படுத்தினார். அவர் சுபாவம் தெரியாமல் நானும் என் வழக்கமான ‘விடமாட்டேன்-போக்கில்’ கூடக்கூட பேசி கடைசியில் ஒரு வழியாக நிம்மதியாக நிறைவு செய்தேன். “எங்களால் அவருடன் பேசமுடியாது. நீங்கள் விவாதித்தது ரொம்ப மகிழ்ச்சி!” என்றார்கள். அவர் கருத்து நம் தெற்காசியாவிற்குப் பொருந்தாது. நீங்கள் சொன்னது சரி என்றார்கள். நின்று வென்றீர்கள்! வாழ்த்துக்கள் என்றார்கள்…

தமிழ் நேசம் மட்டுமில்லை! சந்திமா என்ற சிங்களர் அக்கறையுடன் என்னிடம் வந்து, நீ இருப்பது Regional position அதனால் மேலே இருந்து பார்ப்பது போலவே இருக்கட்டும் உன் அணுகுமுறை என்றார்! நாம்தான் களத்தில் காணாமல் போகிறவர்களாயிற்றே!

ஏதாவது தெற்காசியக் கூட்டம் என்றாலும், பார்த்ததும் புன்னகைத்துப் பக்கத்தில் வந்து உட்கார அழைப்பவர்கள் இலங்கைப் பங்கேற்பாளர்களாகத்தான் இருக்கும். இந்திய மேசையைத் தேடிப் பிடித்தாலும் அடையாளம் கண்டு சிரிப்பவர் சிலரே!

இரு வாரத்திற்கு முன் தாய்லாந்து புக்கேத் தீவில் நடந்த யுனிசெஃப் கூட்டத்தில் சிங்களர் ஒருவர் பார்த்ததும் வியந்து வந்து பேசினார். ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தார். “குணரத்ன என்று ஒரு Nutritionist மாதிரியே இருக்கிறாய்” என்றார்”. கூடவந்தவர்களைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காண்பித்தார். சிங்கள பாணியில் சேலை கட்டினால் நிச்சயமாக உன்னை இலங்கைப் பெண் என்றுதான் நினைப்பார்கள்” என்றார்.

சரி! ஆனால் எந்தப் பாணியில் சேலை கட்டினாலும் இந்தியப் பெண்ணா என்று யாரும் கேட்க வழியில்லை! தென்னாட்டவரை கேரளா, தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திர என பகுத்துணராமல் பொத்தாம் பொதுவாக மதராஸி யா எனக் கேட்பதற்கு சிலர் வருந்துகிறார்கள். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என்னைப் பார்த்து இதுவரை…மதராஸியா எனக்கூடப் பலர் கேட்கவில்லை! நான் என்னவோ 100% தமிழ்ப்பெண் தோற்றம் கொண்டதாக நம்பிக் கொண்டிருக்கிறேன். அசல் தமிழ்ப்பெண்கள் அவ்வளவாக தனியாக ஊர் சுற்றுவதில்லை! அதனால் வித்தியாசமான ஒரு உருவத்தைப் இடம் பொருத்திப் பார்ப்பதில் சிரமம்! இது எனக்கு நானே ஆறுதலாகச் சொல்லிக் கொள்வது! இந்தியாவில் தமிழ் நாடு என்று ஒரு பகுதி இருப்பதும் அங்கே தமிழர்கள் இருப்பதும் பரவலாகப் பலருக்குத் தெரியவில்லை. முதலில் தமிழ் என்று சொன்னவுடன் தடுமாறாமல் இலங்கையா எனக் கேட்பார்கள். அண்மைக்காலத்தில் தமிழர் நிலைக்காக அதிகம் வருத்தம் தெரிவித்தார்கள். எங்க சுத்தினாலும் இங்கதான் வந்து நிக்குது! “Are you Srilankan?”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s