ஒரு சுய விமர்சனம்

தமிழ் நாட்டில் ஊரைவிட்டுக் கிளம்பியே தீர வேண்டும் என்ற நிலை அடிக்கடி அனைவருக்கும் வருவதில்லை. ‘நிலை’த்தன்மையே விரும்ப இயலாதவைக்கும் உரம் போட்டு வளர்த்துவிடுகிறது. இது கிராமங்களில், மாவட்டங்களில், மாநிலத்தில் மட்டுமல்ல சுற்றங்களிலும், வீடுகளிலும் கூட தலைவிரித்தாடுகிறது. இவை எல்லாம் வெளியேயிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது.

போட்டி மனப்பான்மை, பொறாமை, பட்டா போட்டுக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வேலை பார்க்கவிடாதது! இவை நம் மாநிலத்தில் அரசு சாரா நிறுவனங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை நிறைந்துள்ளது. அதுவும் வேற ஊர் ஆட்களை விட்டுவிடுவார்கள். தமிழர்களுக்குத் தமிழர்கள் நன்றாக காலை வாறுகிறார்கள்.  எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், பேராசிரியர்களின் காழ்ப்புணர்ச்சிகள் மாநில அவமானமாகப் படுகிறது. பண்பட்ட நிலை தொட்டு சமூகத்திற்குக் கலங்கரை விளக்கமாக நிற்கவேண்டியவர்கள் . . . சகதியில் கல்வீசிக் கொண்டிருக்கிறார்கள்

முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடி அறிவும், வளமும் பெற்று, பாரெங்கும் பரவியிருப்பினும் தனக்குரிய இடத்தைப் பெறாமைக்கு உள்ளார்ந்த பகைமை உணர்வுகளே முக்கியக் காரணம்

அரசியல்வாதிகளிடம் இருக்கும் அளவுக்கு சாமானியர்களிடமும் அதிகரித்து வரும் அதிகார போதை கொஞ்சம் பீதியைக் கிளப்புகிறது. நயமான உறவு தொழிலுக்கு அவசியம். ஆனால் நடைபாதைக் கடைக்காரர் முதல் பெருவணிகர் வரை செய்யும் அடாவடித்தனத்துக்குக் காரணம் வெயிலா, வேகமா, விரக்தியா…? உணர்வுபூர்வமானவர்கள், Sentimental Idiots, வெகுளிகள் என்றெல்லாம் சொல்லி விட்டு விட முடியாது.

 ஓரிரு பிரிவினரே  நம் எதிரிகள் என நம்பி வருகிறோம். ஆதிக்க சக்திகள் சந்தடி இல்லாமல் காய் நகர்த்துவது உண்மையாக இருந்தாலும் நமக்கு நாமே எப்போது எதிரியாகிறோம் என்ற தேடலும் அவசியம். எதிரி என நாம் நம்புவோரிடமும் கற்றுக் கொள்ள பாடங்கள் உண்டு.

 நம்மை நாமே முழுமையாக மதித்து போற்றி, நேசிப்பதில்லை. தோல்விகள் பட்டியல் நம்மிடம் எப்போதும். நம் சாதனைகளை நாமே மறப்பதால் நமக்குரிய தருணத்தில் காணாமல் போகிறோம்.

  •  உறவைப் பொறுத்தவரை ரொம்ப இறுகவும், உருகவும் வேண்டாம். போற்றி, நன்றி சொல்ல நினைப்பவர்களிடம் தாமதிக்காமல் நன்றி சொல்லலாம்.
  •  கொஞ்சம் தெளிந்தவர்கள் இறுக்கத்துக்குள் … சாமானியர்கள் உருக்கத்துக்குள்… மிகையான இறுக்க-உருக்கத்தால் பயன் இல்லை. நம்மவர்களை நாமே இன்னும் கொஞ்சம் நேசிக்கலாம், ரசிக்கலாம், பாராட்டலாம். நல்லவை எல்லாமே Taken for granted!
  •  ஆழமான உண்மைகளைக்கூட ஆவேசம் இல்லாமல் நிதானமாக அழுத்தமாகச் சொல்லலாம்.
  •  அதிகம் பேசாமல் கருத்துக்களைக் கூறாமல் இருப்பதே தன்னடக்கம், ‘நிறைகுடம்’ என நினைப்பது மடமை. சரியான நேரத்தில், சரியான கருத்தை சரியான அளவில் கூறுவது நம் பொறுப்பு.
  •  அதிகம் பேசி முடிவெடுக்குன் பொறுப்பில் உள்ளவர்களை விமர்சிக்கிறோம். நாம் பேசாததால் நம் நேரத்தையும் அவர்கள் விழுங்குகிறார்கள், “உன் கருத்து என்ன?” என யாரும் நம்மிடம் பேட்டி எடுக்கப்போவதில்லை. நம் கருத்துக்கான நேரம், சூழல் உருவாக்குவது நம் பொறுப்பே! இதை உணர்ந்தால் முடிவின் முடிவையே மாற்ற முடியும் என நம்ப வேண்டும். முயற்சி கூட செய்யாமல் குறை கூறுவது கோழைத்தனம்.
  •  யாராவது நமக்கு உதவுவார்கள்; கடவுள் பார்த்துக் கொள்வார் என்று இருக்காமல் அவ்வப்போது நமக்கு நாமே உதவலாம்.
  •  அரிய வாய்ப்பையும் சாக்குப்-போக்கு சொல்லி தள்ளாமல், ஆனது ஆகட்டும் என்று சென்று வென்று வரலாம். ஒத்து வராவிட்டாவில் அடுத்த நாளேகூட கம்பீரமாக வெளியேறலாம். “அவங்க என்ன நினைப்பாங்க!~ இவங்க என்ன சொல்லுவாங்க” என்றெல்லாம் யோசிக்கவே வேண்டாம். வாழும் 60-70 ஆண்டுகள் நமக்காகவே வாழ்ந்துவிட்டுப் போகலாம். …அவங்கவங்க பிரச்சனையே மூச்சு முட்டும் அளவுக்கு இருப்பதால்…எவங்களும் நம்மைப் பத்தி கவலைப்படப் போவதில்லை. அப்படியே யாரும் விமர்சித்தாலும் அதில் கலங்குவது அநாவசியம்.  என் மீது என்னை விட அக்கறை மிக்கவர் யாரும் இல்லை என சொல்லிக் கொள்ளலாம். எப்போதும் நம்மில் நாமே லேசாக உணரலாம். இட மாற்றம், நிலை மாற்றம் என மாற்றங்களுக்கு எப்போதும் நம்மைத் தயாராக வைத்துக் கொண்டு மாற்றங்களைக் கொண்டாடலாம்.

 விமர்சனம் போல எழுதியிருக்கும் இந்தப் பதிவில் ‘முதல்’ விமர்சனம் எல்லாம் என் மீதுதான். மண் மணம் மாறாத என் மூலம்தான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்-அலசுகிறேன். முதலில் மாற வேண்டியது நான்தான் என்பதை முழுமையாக உணர்கிறேன்.  என் சில மாற்ற மகிழ்ச்சிகள்தான் இந்தப் பதிவு எழுத எனக்குத் தூண்டுகோல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s