அப்பா-அம்மா மலர்வனம்

அப்பா-அம்மா
அப்பா-அம்மா

அப்பா ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் காலையிலும், நான்கு மணி நேரம் மாலையிலும் தொடர்ந்து கடுமையாக உழைத்து ஒரு தனி நபர் தன் வாழ் நாளில் எத்தனை மரங்கள் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்த்துவிட்டார்கள். அம்மா-அப்பாவின் கனவு நல்ல தோட்டம். இருவர் உழைப்பால் சென்னைப் புறநகர்வாசிகள்கூட  நம்ப முடியாத அளவுக்கு இன்று ஒரு நல்ல தோட்டம் வீட்டையடுத்த மனையில்…

 

வீட்டிற்குள், வீட்டுக்கு முன் இருபக்கமும், வீட்டுக்குப் பின் வேம்பு, மலை வேம்பு, புங்கை, செண்பகம், மகிழம், மருதாணி, தேக்கு, வாழை, தென்னை, சரக் கொன்றை மற்றும் எனக்குப் பெயர் தெரியாத சிவப்பு பூ பூக்கும் மரம் இப்படியாகக் குறைந்த பட்சம் 25-30 மரங்கள் வளர்த்திருப்பார்கள். இது தவிர பப்பாளி, நார்த்தங்காய், எலுமிச்சை, கறிவேப்பிலை, முருங்கை, கத்திரிக்காய், தக்காளி, சேப்பங்கிழங்கு, பச்சை-சுண்டைக்காய், மிளகாய் (அதென்ன பச்சை சுண்டைக்காய்? காய்க்கும்போது பச்சையாகத்தானே காய்க்கும்?), சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள் என சமையலறைத் தோட்டமும் உண்டு. நிலத்தை சமப்படுத்த ஏரிச்சவடு என்ற மண் அடித்திருந்திருந்தார்கள். அம்மா-அப்பாவின் தோட்ட ஆர்வத்தைப் பார்த்தவுடன், இப்படித் தெரிந்தால் நல்ல மண் அடித்திருப்போமே என்று வீடு கட்டித் தந்தவர் கூறினார். பிறகு வீடு வந்த புதிதில் அப்பா-அம்மா இருவரும் சேர்ந்து செம்மண், சாண எரு என எல்லாம் போட்டு  மண்ணைப் பண் படுத்தினார்கள்.

 

மேய்ச்சலுக்குப் போய்விட்டு வரும் பசுக்கூட்டம் ஆங்காங்கே ஓய்வெடுக்கும். சுற்றுச் சுவர் கட்டும்முன் ஒரு நாள் எங்கள் வீட்டிலும் ஓய்வெடுத்தது. இதேபோல் ஊரில் ஆட்டுக் கூட்டத்தைக் கூட்டிவந்து இரவு தங்க வைப்பார்கள் என அம்மா சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாம்புகள் நடமாட்டம் பார்த்தவுடன் உடனடியாக சுற்றுச் சுவர் வேலையை முடித்தார்கள். (ஆனா அக்கா அடிக்கடி சொல்லுவது என்னவென்றால், “எலித் தொல்லை நீங்க பாம்பு ரொம்ப அவசியம்! நான் என் வீட்டில் பாம்பு வளர்க்கப் போகிறேன்! அவள் செய்தாலும் செய்வாள்! ரித்து கழுத்தில் போட்டுக் கொண்டு சுற்றினாலும் சுற்றும். ஒரு நாய்க்குட்டியைப் பார்த்தாலும் ரித்துக் குட்டி விடாது. பாச ஊற்றாயிற்றே ரித்து! )  பசுவின் சாணத்தைப் பார்த்தவுடன் தங்கத்தைப் பார்த்ததுபோல் மகிழ்ந்திருப்பார்கள். 

 

வந்த புதிதில் எல்லா விதைகளையும் போட்டு, பறிக்க முடியாத அளவுக்குத் தக்காளி, பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய் எனப் பல வகைக் காய்கள் விளைச்சல் இருந்தது. இந்த வீட்டுக்கு வந்தபோது தக்ஷ் க்கு இரண்டு வயது ஆகவில்லை! அவளுக்கு வெண்டைக்காய் ரொம்பப் பிடிக்கும்! அதனால் அதற்குப் “பாப்பா காய்” எனப் பெயர் வைத்து, இப்போது அமித் குட்டிக்கும் பிடிப்பதால் “பாப்பா காய்” என்ற பெயரே நீடிக்கிறது. தக்ஷ் அம்மாவுடன் தோட்ட உலா செல்லும்போது பள்ளியில் சேரும் முன்னரே காய்களை எண்ணத் தொடங்கிவிட்டாள். அம்மாதானே அவளுக்கு முதல் ஆசிரியர்.

 

காய்களைத் தவிர, இரண்டு-மூன்று நிறங்களில் செம்பருத்தி, இரண்டு-மூன்று வகைகளில் ரோஜா, சாதி மல்லி, பவள மல்லி, முல்லை, சங்குப்பூ, சாமந்ந்தி, ஒற்றைக் கேந்தி, அடுக்குக் கேந்தி, அந்திமந்தாரை, துளசி, கருந்துளசி, பச்சைமல்லி, சம்பங்கி, ஈஸ்டர் லில்லி, மழையன்று மட்டும் பூக்கும் மற்றுமொரு அழகான இளஞ்சிவப்பு பூ, கொத்துக் கொத்தாய் பூக்கும் அழகான சிவப்புப் பூ (இந்தப் பூ முருகனுக்குப் பிடிக்குமாம்), பன்னீர் பூ/ரங்கூன் க்ரீப்பர் என அழைக்கப்படும் காலை-மாலை இருவேளையும் பிங்க், வெள்ளை என நிறம் மாறும் அழகான கொடி (இது எங்களைத் தேடி மேலே வந்து பூக்கும்). மற்றுமொரு கொடியும் இருக்கிறது செடியாக. நாம் Money Plant என சொல்கிறோமே ஊரில் பெரியம்மா அழகாக ‘பணக்கொடி’ என்று சொன்னார்கள்.

 

எத்தனையோ பூக்கள், செடிகள், கொடிகள் மரங்கள். இதைப் படிக்கும்போது அம்மா நிச்சயமாக சிரிப்பார்கள். தோட்டத்தில் எந்தெந்த மரம், செடி எங்கே இருகிறது என்று எனக்குத் தெரியாது. “நான் இவ்வளவு வேலையையும் செய்து கொண்டு ஒரு நாளில் நான்கு முறை தோட்டத்தினுள் சென்று வந்து ஒவ்வொரு பூவையும் ரசிக்கிறேன். உன்னால் எப்படி இப்படி இருக்க முடிகிறது?” இது அம்மா அடிக்கடி என்னிடம் கேட்பது.

 

அம்மாவின் செல்லப் பேத்தி தக்ஷ் என்னிடம், “இதுகூட தெரியாதா” எனக் கேட்பாள்? நேரம் கிடைக்கும்போதெல்லாம், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? ஏன் tired என்று சொல்கிறீர்கள்? பாட்டி எவ்வளவு வேலை செய்வார்கள் தெரியுமா?” எனக் கேட்பாள்.

 

சரி! தோட்டத்தை மாடியிலிருந்து முழுமையாகப் பார்க்கும் ஒரு மேலார்ந்த பார்வையாவது இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது உருப்படியாக. இந்த அறியாமைக்கும் அதன் பின்னணி சோம்பலுக்கும், மிதப்புக்கும் மன்னிப்பே கிடையாது. இருக்கும்  வரங்களை உணர்ந்து வாழ்வதும் மாபெரும் வரம்தான். அந்தக் கொடுப்பினை இல்லாததால்தான் எங்கோ ஒரு மூலையிலிருந்து இப்போது யோசித்து, யோசித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

ஏதோ இந்த அளவுக்கு நினைவுக்கு வருவது ஒரு சிலவற்றை தோட்டக்கலைப் பண்ணையில் அம்மா சொல்லி சில மரம்-செடி-விதைகளை வாங்கியதாலும், சென்ற சில இடங்களிலிருந்து செடிகளைச் சேகரித்து வந்ததாலும், விதவிதமான வண்ணங்களில் பூக்களைத் தேடித்தேடி அவ்வப்போது பறித்ததால்தான்… ஆனால் இன்னொன்றும் தோன்றுகிறது…அவ்வளவாகக் களத்தில் இறங்கி வேலை செய்யாதவர்கள்தான் அருமையான அறிக்கைகள் தயாரிப்பார்கள்! ஐயோ… நானும் அப்படித்தானா? சே! இப்படி ஆயிருச்சே! என்ன பண்றது! எல்லா உண்மையும் சுடும்தானே!

 

ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஏதோ சத்தம் கேட்டது! உடனே இரண்டு வயது தக்ஷ் குட்டி தாத்தா தோட்டத்தில வேலை செய்றாங்க! என்று சொன்னாள். அந்த அளவுக்குத் தோட்டத்தில் மண்வெட்டி ஓசை எங்கள் வீட்டின் பின்னணி இசையாகிவிட்டது. தோட்டத்தில் அப்பா பயன்படுத்துவதற்கென இரண்டு மூன்று அளவுகளில் மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை எல்லாம் எங்கள் வீட்டில் உண்டு! இது தவிர களைவெட்டி பெரியது ஒன்று சிறியது ஒன்றும் இருக்கும். தக்ஷ் அதற்குத் தாத்தா கரண்டி, பாப்பா கரண்டி எனப் பெயர் வைத்திருந்தாள்! அப்பா தோட்டத்தில் வேலை செய்ய இறங்கும்போது தக்ஷ்-ம் பாப்பா கரண்டியுடன் வேலை செய்ய இறங்கிவிடுவாள்.

 

எங்கள் புது வீட்டுக்கு வரும்போது உறவினர்கள் ஒவ்வொருவரும் செடிகள், மரங்கள் கொண்டு வந்தனர். பிறகு தொலைபேசியில் பேசும்போது தென்னை எப்படி இருக்கு, முல்லை எப்படி இருக்கு என்று விசாரிப்பார்கள். விச்சு குட்டிப்பையனாக இருந்தபோது அம்மாவுடன் சேர்ந்து Weekend விதைகள் போட்டான் பிறகு அவர்கள் வீட்டிலிருந்து ஃபோனில், “பாட்டி செடி முளைச்சிருச்சா?…. பம்ப்கின்?… ஓகே பை! என்றான்!

 

இன்று ஏன் அப்பாவின் உழைப்பில் உருவான தோட்டத்தின் நினைவு இவ்வளவு வந்துவிட்டதென்றால்… அப்பா இடைவிடாது தோட்டத்தில் வேலை செய்யும்போது, இடைவெளி விடாது மரங்களை வைப்பதாக அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எப்படி வேர் படரும்; எப்படி நன்றாக வளரும் எனச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இடைவிடாது இதுவரை நான் எழுதித் தள்ளியது திடீரென எனக்கு அப்பாவின் தோட்ட உழைப்பை நினைவுபடுத்திவிட்டது.

 

அப்பாவின் உழைப்பு அழகான தோட்டமாக உயிர் பெற்றுள்ளது. ஆனால் இந்த வலைப்பூவால் யாருக்கு என்ன பயன்? என் எழுத்தை நான் கூட படிக்க மாட்டேன்! இப்படி எழுதினால் அம்மா, மகள் கூடப் படிக்கமாட்டார்கள்!  எழுதும் எனக்குதான் வேறு வேலை இல்லை…. எல்லோரும் அப்படியா? 

சரி! தானாகத் தொடங்கியது தானாக அடங்கும்! –தானே மா? (இது தக்ஷ் Style கேள்வி)  

 

Advertisements

3 thoughts on “அப்பா-அம்மா மலர்வனம்

  1. Hi Bhuvan Ennavenru solvathu, un vaarthai jaalathaiyaa…thotta azhagaiyaa…..ammavaale ninaivu vaikka mudiyatha chedi,kodikagalin ennikkaiyayaa….ennal mudinthathellaam indha valaipakkathai ellorukkum forward seivadhudhaan…..namadhu family photo nanraaga ullathu enru anaivarum sonnaargall….

  2. வரி வரியாய் எழுதி இருக்கும் ‘பு’ வின் வரிகளுக்கு ‘ம’ வின் வரி முதல் பதிலாய் அமைந்தது. மு.க. ஸ்டா…. ஐப் பார்த்து சபாஷ் போடுவது போன்ற தோற்றமளித்தாலும், நம் தற்போது அத்தோட்டத்துக்கு உருவமளிக்கத் தேவையில்லை. பல இடங்களில் பல கேள்விகளுக்கு அவரே பதிலளித்த கவி நயத்துக்கு ஒரு சல்யூட். காரணம், கி.பி. 1560 க்கு முன்னால் மொகலாயப் படைகள் வெற்றி பெறக் காரணமாய் விளங்கியதும் இந்தியர்கள்தான். அக்பரையே கலங்கடித்த ராஜபுத்திரர்களும் இந்தியர்களே. இக்கதையை எழுதி எழுதியே பெயர் வாங்கியதும் ஒரு இந்தியரே! குடும்பத்தில் உள்ள அனைவரையும் இக்கட்டுரைக்குள் கால்பதிக்க வைத்ததும் அருமை. கடிதம் கிடைத்தவுடன் பதில் எழுதவும்.

  3. Pingback: 2010 in review « அம்மாமகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s