Three glasses of red wine and one glass of plain water

மூன்று அடுக்குப் பாதுகாப்பு. முதலில் ஆயுதம் ஏந்திய உள்ளூர் பாதுகாவலர். பிறகு ஒரு பணியாளர். சங்கேத மொழி கேட்டு சிறு சன்னல் வழியாகப் பார்த்து ஒருவர் கதவு திறந்து கைப்பைகள், மேலங்கியைப் பரிசோதித்து மறுபடி சங்கேத மொழி, சன்னல் திறந்த பின் கதவு திறக்கிறது.  மற்றொரு கதவு … இதுவரை எல்லாம் தகர டப்பா தரத்தில் ஒரு ரோட்டுக் கடையை நினைவு படுத்துகிறது.

பிறகு… உள்ளே சென்றால் ஒரு பார்… அங்கே ஒரு சர்வதேச கலந்துரையாடல் கூட்டமோ என நினைக்கச் செய்யும்  அளவுக்கு அனைத்து நிறத்தினரும்   (ஊர் விட்டு ஊர் வந்து காபுல் நகரில் மையம் கொண்டவர்கள்). அரசு சாரா நிறுவனத்திற்கு ஆள் தேடுபவர்கள் இங்கு சுயம்வரமே நடத்தலாம்.

..ஃப்ரெஞ் உணவகம். ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் பட்டியலில் ஒன்று கூட புரியவில்லை.  உடன் வந்தோர் உதவியுடன் ஏதோ ஒன்றைத் தேற்றிக் கொள்ளலாம்…அடடா வெளி நாட்டுப் பணத்தை உள் நாட்டுக்குள் கொணர ”வெளிநாட்டு உணவைத் தரும் உணவகத்தை விடச் சிறந்த வழியில்லை.

கூடிப் பேசிக் களிப்பது மட்டுமல்ல எல்லா திட்டம் தீட்டலும் வியூகம் வகுத்தலும் இங்குதான்… அயல் நாட்டு உணவைத் தேடி வருவோருக்கு பாதுகாப்பான இடங்களுக்குப்  பஞ்சம் இருப்பதால் இங்கே கூட்டம் அலைமோதுகிறது.  கூச்சலும், கூப்பாடும், ஆர்ப்பாட்டமும் தான் கலந்ததால் ஒரே இறைச்சல்தால்.  தடையில்லாததால் சுற்றும் புகை நாற்றம் வேறு  

… வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த வெவ்வேறு செயல் திட்டங்கள் ஒரே ஆஃப்கானில்…எந்தெந்த பகுதியில் ஒரு நாட்டின் ராணுவப் படை உள்ளதோ அங்கேயே அதே பகுதியில்  அந்நாட்டைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமும் பணியில் இறங்குகிறது…அவர்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள். திரும்பிப் போகும் தினம் தெரியாது இயல்பு வாழ்வைத் தொலைத்து வாழ்பவர்களும் ஒரு வகையில்  (திரி வெளியே தெரியாத) வெடிகுண்டுகள்தான் -எப்போது, எப்படி வெடிப்பார்கள் என்று கண்டுணர முடியாது.  இங்கு பணிபுரியும் எந்த அரசுசாரா நிறுவனமும் கொள்கை ரீதியாக தன் நாட்டின் ராணுவ நடவடிக்கையை எதிர்க்க முடியாது.  பகைத்துக் கொள்பவர்கள் இங்கே இருக்க முடியாது.

ஒரே நாடு ஒரே நேரத்தில் உணவுப் பொட்டலத்தையும், குண்டுகளையும் வான்வழியாகப் பொழிகிறது

…பனி- சகதி, வெளிச்சம்-குளிர் மட்டுமல்ல குண்டு-உணவு கூட இந்த நாட்டின் விசித்திரக் கலவைதான்

…இங்கு எத்தனை நிறுவனங்கள், எத்தனன வெளி நாட்டினர் இருக்கிறார்கள்,  என்னென்ன பணி புரிகிறார்கள் என்பதைப் புரிந்துணர இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். வண்டி வண்டியாக வந்திறங்கி முட்டி மோதிக் கொள்கிறார்கள்

… இதுவும் ஒரு வணிகம்… போர் தேவை என இயங்கும் ஆயுதத் தொழிற்சாலைகளைப் போல, இல்லாமை, இயலாமை இருக்க வேண்டும் என இயங்கும் சர்வதேச நிதி-சேவைத் தொழிற்சாலைகள். ஒரு முகப்படுத்தினால் ஒரே நாளில் தீர்க்கலாம் உலகின் இல்லாமை-இயலாமை களை. ஆனால் ஒருமுகப்பட உடன்பட்டாலும்… அதற்காக  கூட்டம் போட்டு,  திட்டம் தீட்டி, திட்ட முன் வரைவு இவர்கள் தயாரிக்கும் முன் இன்னொரு நூறாண்டு உருண்டோடிவிடும்.

 இயற்கை எழில் கொஞ்சும் வளம் மிக்க தேசங்களும், மாநிலங்களும் கூடுதல் ஆபத்துகளைச் சந்திக்கின்றன…அழகே அழிவை வரவேற்கிறது … வளமே வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்குகிறது.

ஒரு நாட்டை சூறையாட இன்னொரு நாட்டுக்கு அனுமதி தருவது யார் … ஒரு தேசத்தை வளைத்துப்போட, அதன் வளத்தை அபகரிக்க, தன் சொந்த வணிகத்தைக் கொழிக்கச் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

வரலாற்றுச் சிறப்பு மறந்து, அடையாளம் இழந்து தவிக்கும் நாடுகள் எப்போது தன் நிலைக்கு வரும்? 

நிஜமான எதிரிகளை விட்டுவிட்டு பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மீது அமிலம் வீசி, அவர்களைக் கொளுத்தி, அவர்களின் பள்ளிகளை இடித்து, நூலகங்களைத் தீக்கிரையாக்கி இன்னொரு போரைத் தன் நாட்டின் மீதே தானே ஏவி, தன் வீட்டிற்குத் தானே தீ மூட்டுபவர்கள் என்ன சாதிக்கிறார்கள்?

இதை எழுதி 40 நாட்கள் ஆகவில்லை…இன்று மார்ச் 28 அன்று நான் நினைக்கிறேன்…”இப்படியெல்லாம் செய்பவர்களை ஏவி விடுபவர்கள் யாராக இருக்கும்?” நான் பார்த்த ஆஃப்கான் மக்கள் சொன்னதுபோல இந்நாட்டுக்கு அவப்பெயர் தேடிதர,  அதைக்காரணம் காட்டி பெரும் படையைக் கொண்டு வந்து குவிப்பதற்கான சர்வதேச சதித்திட்டமோ இதெல்லாம்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s